வங்கி வாடிக்கையாளர் ஒருவரிடம் 77.98 மில்லியன் ரூபாவை வங்கி உத்தியோகத்தர்கள் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் தலஹேன கிளையின் முன்னாள் சம்பத் வங்கி உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் நேற்று(12.12.2023)பயணத் தடை விதித்துள்ளது.
விருது பெற்ற பாரம்பரிய வைத்தியர் கெலும் ஹர்ஷ கமால் வீரசிங்க என்ற வாடிக்கையாளரின்,அனுமதியின்றி 77.98 மில்லியன் மோசடி செய்யப்பட்டதாக அவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சம்பத் வங்கியின் தலஹேன கிளையில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் கடுவெல நீதவான் நீதிமன்றில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.
இதன்படி லக்னா ஜயசேகர (முதல் அதிகாரி), தனுஜா முத்துக்குமரன (முன்னாள் முகாமையாளர்), அருண ஜினதாச (முன்னாள் பிராந்திய முகாமையாளர்), கயானி விதானபத்திரனகே (எழுதுவினைஞர்) மற்றும் ஹிரந்த கொடிகார (கிளை கடன் அதிகாரி) ஆகிய ஐந்து வங்கி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.