“சமஷ்டியே தீர்வு’ என்ற தொணிப் பொருளில் நேற்று (14) சர்வதேச மனித உரிமைகள் தினம் மட்டக்களிப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கத்துவ அமைப்புக்களாக கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வரும் 06 அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கண்டுமனி லவகுகராசா தலைமையில் நடைபெற்ற நேற்றைய நிகழ்வானது தன்னாமுனை மினானி விளையாட்டு மைதானத்தில் பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி சம்ஸ்டி தீர்வு கோரிய வாசகங்கள் எழுதிய பாதாதைகள் மற்றும் கொடிகளுடன் ஊர்வலமாக மினானி பிரதான மண்டபத்தினை சென்று அங்கு நிகழ்வகள் யாவும் ஆரம்பமானது.
தலைவர் தமது தலைமை உரையில் இன அடக்கு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகி இருக்கும் எமது வடக்கு கிழக்கு மக்கள் தனியான தேசியம் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழக் கூடிய வகையிலான ‘ஜக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு ‘ வேண்டும் எனும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் பட்சத்திலே வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாகவும் சுயமாகவும் தமக்கான அடையாளத்துடனும் வாழ முடியும் என தெரிவித்தார்.
கிழக்கில் பல்வேறு அடக்குமுறைகள்,நில ஆக்கிரமிப்புக்கள்,என்பன தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் ஆவணப்படம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.கிழக்கில் அழிக்கப்பட்ட வரலாறு ஆவணப்படம் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.மக்கள் பிரகடன ஆவணம் அதிதிகளிடம் கையளிக்கப்பட்டது. மனித உரிமை தொடர்பான ஆவணங்கள் அடங்கிய காட்சி கூடம் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மனித உரிமைகள் ஆர்வலர் கே.எம்.ருக்கிபெனான்டோ, யுனோப்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி இவாஞ்சலி மற்றும் மட்டக்களப்பு.அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.