போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயன்முறையை நெறிப்படுத்துவதற்காக புதிய முறைமையொன்றினை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக அனைத்து காவல் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
புதிய முறையின் கீழ், போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேக நபரினுடைய தகவல்களையும் உள்ளீடு செய்வதன் மூலம் காவல்துறையினரால் கடந்தகால குற்றவியல் பதிவுகளையும் மீட்டெடுக்க முடியும்.
இதற்காக போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய அனைத்து கைதுகளின் விவரங்களும் தரவு அமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தரவு அமைப்பு நேற்று முன் (14) காவல் தலைமையகத்தின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் ஆகியோரின் அனுசரணையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் , பிரதி காவல்துறை மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் ஆகியோருக்குத் திட்டமிட்ட விசேட போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.