லெபனான் நாட்டு வர்த்தகர் ஒருவர் தனது தாய்க்கு வைத்தியம் பெறுவதற்காக ஓமானில் இருந்து இந்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்த வர்த்தகரின் பணப்பையில் இருந்து 14,000 அமெரிக்க டொலர்களை திருடிய சீன நபர் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக, வௌ்ளிக்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவரை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
48 வயதான சீனப் பிரஜை, லெபனான் வர்த்தகர் மற்றும் அவரது தாயாருடன், ஓமானின் மஸ்கட்டில் இருந்து புதன்கிழமை 13 ஆம் திகதி காலை 07.20 மணியளவில் ஓமன் எயார்லைன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
பணத்தை திருடிய சீன பிரஜையை அங்கு கைது செய்ய கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் விமான நிலைய சுற்றுலா பொலிஸாரும் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன
இதேவேளை, இந்த சீனப் பிரஜை, வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 01;20 மணியளவில் இந்தியன் எயார்லைன்ஸின் ஏஐ-284 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அதன்போது, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பெறுமதியான உலகின் பல்வேறு நாடுகளின் நாணய அலகுகள் பலவற்றை வைத்திருந்தமைக்காக இந்த சீன பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவற்றின் மொத்த பெறுமதி 827,712.76 ரூபாயாகும்
இந்த சீனப் பிரஜை “உலகம் முழுவதும் தேயிலை விற்பனையில் ஈடுபட்டு வரும் விற்பனையாளர் என்றும், அந்த நடவடிக்கைகளில் கிடைத்த பணம் தன்னிடம் இருப்பதாகவும் பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்” என கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சீனப் பிரஜை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.