தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என தெரிவித்த பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன், காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,காய்ச்சல் வந்தால் பயப்படாமல் கவனமாக இருந்தால் மரணம் வராது பாதுகாக்கலாம்.காய்ச்சல் வந்தால் ஓய்வெடுக்க வேண்டும். நாளாந்த உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
இந்த காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது.உதாரணமாக சுவாச தொற்று நோய், உண்ணிக் காய்ச்சல் என்பன பரவுகிறது. காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெறலாம்.
சிறுவர்களை அவதானமாக பார்க்கவேண்டும்.காய்ச்சல் ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில் அதிகளவில் நீரைப் பருக வேண்டும். வளர்ந்தவர்கள் மணித்தியாலத்துக்கு ஒருமுறை 100 மில்லிலீற்றர் நீர் வரையில் பருக வேண்டும். சிறுநீர் போதுமான அளவு வெளியேறுகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
தொடர்ச்சியாக காய்ச்சல் எற்பட்டு சிறுநீர் வெளியேறும் அளவு குறைபவர்கள், சத்தி வந்து நீர் அருந்த முடியாதவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.