அடிப்படை உரிமைகளை மீறியமை மற்றும் குற்றவியல் வழக்குகள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எந்தவொரு அதிகாரியையும் பொலிஸ் மா அதிபர் நிலைக்கு நியமிக்கக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில், வெளிப்படையான முறையில் பொலிஸ் அதிபர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அடிப்படை உரிமைகளை மீறியதற்காக மனுதாரர் ஒருவருக்கு, தமது தனிப்பட்ட நிதியில் இருந்து இழப்பீடு வழங்கவேண்டும் என்று தற்காலிக பெலிஸ் மா அதிபர் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் பொலிஸ் மா அதிபரின் நியமனம், பொலிஸ் சேவையில் முன்னுதாரணமும், எவ்விதக் களங்கமும் அற்றதும் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக் கூடிய வகையில் இருக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.