மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளை மோப்ப நாயின் துணையுடன் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து நேற்று வியாழக்கிழமை (21) அதிகாலை 2 மணியளவில் முற்றுகையிட்டதில் ஒரு பெண் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து கேரள கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப்பொருள்கள் மற்றும் ஒரு தொகை பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் நெறிப்படுத்தலில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து, கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
கைதான சந்தேக நபர்கள் நால்வரையும் விசாரணையின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.