நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் 30 முதல் 35 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் குறித்த ஆற்றை அண்மித்த தாழ்நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் ஆறுகளில் நீராடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக விக்டோரியா, ரன்தம்பே மற்றும் ரந்தெனிகல உள்ளிட்ட 8 நீர்த்தேக்கங்கள் அவற்றின் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமையினால் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.