அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் உணவகங்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதுடன், அதிகளவான மக்கள் உணவுத் தேவைக்காக உணவகங்களையே இப்பிரதேசத்தில் நாடி வருவதை அவதானிக்க முடிகின்றது. உணவுக் கழிவுகள் அகற்றப்படாமை, சுகாதார முறைகளைப் பேணி உணவு தயாரிக்கப்படாமை, உரிய நடைமுறைகளுடன் உணவுகள் காட்சிப்படுத்தப்படாமை, பழைய உணவுகளை மீள சமைத்து பரிமாறுதல் போன்ற பல்வேறு சீர்கேடுகள் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களின் கழிவு நீரை வெளியேற்றும் முறைமைகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இவற்றைக் கட்டுப்படுத்தி, நுகர்வோரின் ஆரோக்கியத்தின் கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.