கார்களில் லிப்ட் கேட்டு ஏறி, ஆடைகளை கிழித்துக்கொண்டு பலாத்கார நாடகமாடி, காரில் உள்ளவர்களிடம் பணம் பறித்து வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் ஹைதராபாத் அருகே இருக்கும் சாஸ்திரிபுரத்தைச் சேர்ந்தவர் சுமையா சுல்தானா (30). இவர் தனியாக காரில் வரும் ஆண்களை குறிவைத்து லிப்ட் கேட்டு ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். காரில் ஏறியவுடன் அவர்களை மயக்குவது போல பேசி வலையில் வீழ்த்துவார்.
பின்னர், சிறிது தூரம் அவர்களுடன் அந்தரங்கமாக பேசிக்கொண்டு வருவார். இதனால் ஆண்கள் சபலப்படும் நேரத்தில் சுமையா, திடீரென தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு கதறி அழுவார். காரில் உள்ளவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப் போவதாக அழுதபடி கூறுவார்.
இதனால் பயந்து போகும் ஓட்டுநர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிக் கொண்டு காரை விட்டு இறங்கி விடுவது அவரது வழக்கம். இவரது மிரட்டலுக்கு பயந்து போகும் ஓட்டுநர்கள், முறைப்பாடு ஏதும் அளிக்காமல் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு, கிளம்பி விடுவார்கள். இது சுமையா சுல்தானாவுக்கு சாதகமாக மாறிப் போனது.
இந்தநிலையில், வழக்கம் போல நேற்று ஒரு கார் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு பயணிக்கும் போது, தன்னுடைய பாணியில் ஜாக்கெட்டை கிழித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் ஓட்டுநர் செய்யாத தப்புக்கு ஏன் பணம் தர வேண்டும் என்று கேட்டதுடன் பணம் தர மறுத்து, நேராக வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு விட்டுள்ளார். காரில் இருந்த சுமையாவை பொலிஸில் ஒப்படைத்து இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதையடுத்து, இருவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், சுமையா பல ஓட்டுநர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி பொலிஸாரிடம் சிக்க வைத்ததும், பலரிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.