மட்டக்களப்பில் நேற்று 08 முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் மற்றும் வயல் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன்,நாளாந்த சில தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்துள்ளதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.