சோமாலியாவில் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதையடுத்து, அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பினால் இலங்கையர்கள் குழுவொன்று பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் பொய்யான வதந்திகளை பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கையின் போது சரக்கு விமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் எம்.ஐ. 17 உலங்கு வானூர்தி சாம் – ஒன்ஜாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. எவ்வாறிருப்பினும் அதிலிருந்த பணியாளர்களின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை விமானப்படை விரைவுபடுத்தியுள்ளது. எனவே இது குறித்து தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு மக்களை கேட்டுக் கொள்கிறது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.