அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது.
ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி (மேட்ச் பிக்சிங்), ரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜாய்தி, உதவி பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி மேலாளர் ஷதப் அகமத் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் 32 வயதான நசிர் ஹூசைன் பங்களாதேஷ் அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நசீர் ஹூசைன் இரண்டு வருடங்கள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.