இரண்டு மாதங்களுக்கு முன் செப்பணிடப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் புலிபாய்ந்தகல் வீதியானது அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றுமுழுதாக சேதமாகியுள்ளது. அதனால் அவீதியூடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் மக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் செப்பணிடப்பட்ட வீதியானது ஒரு பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததிற்கே இப்பிடி சேதமாகியுள்ளது என அப்பிரதேசவாசி ஒருவர் அதனை புகைப்படம் மற்றும் காணொளி என்பன எடுத்து முக நூலில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவரும் அவரது முக நூலில் பதிவொன்றினை இட்டிருந்தார். அதில் இவ்வாறு போடப்பட்டிருந்தது.
”முந்நூறு ரூபாய் பெறுமதியுள்ள ஒரு மின்குமிழ் வாங்கினாலே அது இரண்டு வருடங்களுக்கு நீடித்து உழைக்கக் கூடியது என்று உத்தரவாதம் வழங்கப்படும். மேலும் அந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த மின்குமிழ் செயலிழந்தால் அதற்கு மாற்றீடாக புதிய மின்குமிழொன்றும் இலவசமாக வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். ஆனால் 23.26 மில்லியன் ரூபாய் செலவில் செப்பணிடப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட வீதியொன்று இரண்டே மாதங்களில் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாக அந்த வீதியை பயன்படுத்தும் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதை இங்கு காணக்கூடியதாக உள்ளது.
ஐயா கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ Shivanesathurai Santhirakanthan அவர்களே! பூரணப்படுத்தப்பட்ட இரண்டே மாதத்தில் மழைக்கு கரைந்துபோகக்ககூடிய தரமற்ற தார் கலவையை தயாரித்து இந்த வீதியினை செப்பணிட்ட கொந்துராத்து காரர்களிடம் நஷ்ட ஈடு கோரப்பட்டு, இவர்களது கொந்துராத்து உரிமம் இரத்துச்செய்யப்படவேண்டும். அவரது பெயரில் இனிமேல் வீதிக்கான வேறொரு கொந்துராத்து உரிமங்கள் வழங்கப்படவும் கூடாது. இல்லை இவ்வீதி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினூடாக நேரடியாக செப்பனிடப்பட்டிருந்தால் இதற்கு பொறுப்பான பொறியிலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.
இவ்வாறு செய்தால் மாத்திரமே எதிர்காலத்தில் ஊழலை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்தி அதிகாரிகளால் மக்களுக்கு தரமான சேவைகளை வழங்க முடியும். இல்லையேல் 2048இலும் எமது 100வது சுதந்திரதின விழாவிற்காக IMF யிடம் யாசகம் பெறவேண்டிய நிலையே ஏற்படும் என போடப்பட்டிருந்தது.