வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதி தீவுகளை கையகப்படுத்தும் நோக்கில் இலங்கையில் உள்ள தீவுகளை ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதாக தெரிவித்து ஓர் அதிகார சபையை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.
வட பகுதியில் குறிப்பாக யாழ். குடாவில் 15க்கு மேற்பட்ட வளமான தீவுகள் காணப்படுகின்ற நிலையில் அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் குறித்த அதிகார சபையை உருவாக்க முயல்கிறார்கள்.
மகாவலி அதிகார சபையை உருவாக்கி எவ்வாறு சிங்கள குடியேற்றங்களை வடபகுதியில் ஏற்படுத்தினார்களோ அதே போன்று தீவக அதிகார சபையை உருவாக்கி தமிழர்களின் தீவுகளை கையகப்படுத்தும் தந்திரத்தை அரசாங்கம் செய்ய உள்ளது.
தீவக அதிகார சபை உருவாக்கப்பட்டால் பிரதேச சபை பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் என்பன தலையிட முடியாத சூழ்நிலை உருவாகும்.
அது மட்டுமல்லாது வடமாகாண சுற்றுலா அதிகார சபை மூலம் கிடைக்கப் பெறுகின்ற வருமானம் மாகாணத்தை விட்டு மத்திக்குச் செல்வதோடு மாகாண அதிகாரங்கள் செயலிழந்து போகும்.
குறித்த அதிகார சபை செயற்படுத்தப்படும் ஆனால் தீவகப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்கள் தொழிலுக்கு செல்வதில் வரையறைகள் மட்டும் பாடுகள் ஏற்படுத்தப்படலாம்.
ஆகவே குறித்த விடையம் தொடர்பில் தமிழ் மக்கள் சார்ந்து பயணிக்கின்ற அரசியல் கட்சிகள் விழிப்பாக இருந்து வர போகும் ஆபத்தை முன்கூட்டியே தடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.