மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி டச்பார் புனித அந்தோனியார் ஆலயத்தின் 44 வது வருடாந்த திருவிழா கடந்த (19) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நேற்று (21) திகதி கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றுள்ளது.
கல்லடி – டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றமானது கடந்த (19) திகதி மாலை 5.30 மணிக்கு பங்குத்தந்தை இயேசு சபைத்துறவி அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து நவநாட் காலங்களில் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றதுடன், (20) திகதி சனிக்கிழமை மாலை புனிதரின் சுற்றுப் பிரகாரமும், நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெற்றது.
செங்கலடி மறைக்கோட்ட முதல்வரும் சத்துறகொண்டான் இறையிரக்க திருத்தல பரிபாலகருமான ஏ.தேவதாசன் அடிகளார் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அருட்தந்தை கிறைட்டன் அவுஸ்கோன் மற்றும் இயேசு சபைத்துறவிகளான ஜோன் ஜோசப்மோரி, சு.ரொசான், அனிஸ்டன் மொறாயஸ் அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரர் லியோ காண், அருட்சகோதரிகள், நற்கருணை பணியாளர்கள், பொது நிலையினர்,
மட்டக்களப்பு – கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் சந்திம குமார சிங்க, அவரது பாரியார், பங்குமக்கள், அயல்பங்கு மக்கள், ஆலய நிருவாகிகள் என அதிகளவிலானோர் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்ததுடன், புனிதரின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.