யுக்திய விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதாளம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.
அவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதே எங்களின் ஒரே இலக்கு, எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்
இதேவேளை இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் குற்றச் செயல்களால் ஆதாயம் அடைபவர்களாவர். போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் 65% க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் இருப்புக்கள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.
மேலும் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முழுமையாக அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
ஒரு மாத காலப்பகுதியில் 30,000 இற்கும் அதிகமானோரை கைது செய்வதற்கு வழிவகுத்த ‘யுக்திய’ போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
‘யுக்திய’ எனப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்திவிட்டு மறுஆய்வு செய்து சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையிலான கொள்கைகளில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் பாவனையாளர்களுக்கும் மனித உரிமைகள் இருப்பதாகவும், மேலும் பாகுபாடுகள் மற்றும் களங்கங்களை எதிர்கொள்ளாமல் கண்ணியமான வாழ்க்கை வாழத் தகுதியானவர்கள் என்றும் ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
‘யுக்திய’ எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது சித்திரவதைகள் மற்றும் தவறான சிகிச்சைகள் பதிவாகியுள்ளதாக உயர்மட்ட நிபுணர்கள் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டாய புனர்வாழ்வு மையங்கள் உடனடியாக மூடப்பட்டு, தன்னார்வ, சான்றுகள் அடிப்படையிலான, உரிமைகள் அடிப்படையிலான மற்றும் சமூகம் சார்ந்த சமூக சேவைகளால் மாற்றப்பட வேண்டும் என்று கூறி, அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அவர்கள் தயாராக உள்ளனர்.
மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான தற்போதைய சட்டத்தை மறுஆய்வு செய்யுமாறும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஆயுதப்படைகளின் ஈடுபாட்டை நிறுத்துமாறும் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறார்கள்.