தென் ஆபிரிக்காவின் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தின் போது நமிபியாவிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட இலங்கை, பந்துவீச்சில் அசத்தி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்ற சுப்புன் வடுகே, துல்லியமாக பந்துவீசிய ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு, தினுர கலுபஹன ஆகியோர் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்து அதன் கௌரவத்தைக் காப்பாற்றினர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை அங்கத்துவ நாடாக இருக்கும் நமிபியா இந்தப் போட்டியில் அசாத்திய வெற்றி ஒன்றை ஈட்டும் என கருதும் அளவுக்கு இலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 37.5 ஓவர்களில் 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஒரு கட்டத்தில் 20 ஓவர்கள் நிறைவில் முன்வரிசை வீரர் ஐவரை இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை பெற்றிருந்தது.
புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (10), ரவிஷான் டி சில்வா (2) ருசந்த கமகே (17) தினுர கலுபஹன (0) ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை.
மத்திய மற்றும் பின்வரிசையிலும் அதே கதிதான் தொடர்ந்தது.
ஷாருஜன் சண்முகநாதன் (13), மல்ஷா தருபதி (6), விஷ்வா லஹிரு (0), ருவிஷான் பெரேரா (0), கருக்க சன்கேத் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.
எனினும் மறு பக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சுப்புன் வடுகே 79 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது துடுப்பாட்டமே இலங்கைக்கு 100 ஓட்டங்களைக் கடக்க உதவியது.
பந்துவீச்சில் சச்சியோ வென் வூரென் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஹானஸ் டி வில்லியர்ஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 27 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
ஒன்பதாம் இலக்க வீரர் ஹன்ரோ பேடன்ஹோஸ்ட் (11), பீட்டர் டெனியல் ப்ளைனோட் (17 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, தினுர கலுபஹன ஆகிய இருவரும் மிகவும் அற்புதமாக செயற்பட்டனர்.
ருவிஷான் பெரேரா 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 5 ஓவர்கள் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்களை விட விஷ்வா லஹிரு 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆட்டநாயகன்: சுப்புன் வடுகே