புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தனியார் துறையில் இலஞ்சம் வாங்குவதற்கு எதிரான முதல் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.
தனியார்துறையில் பணியாற்றும் யுவதியொருவரின் பணி நிரந்தரமாக்கப்படுவதற்காக, பாலியல் இலஞ்சம் கோரி, ஹொட்டல் அறைக்கு அழைத்து சென்ற குற்றச்சாட்டில் ஹொட்டலின் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டமானது, தனியார் துறையில் இலஞ்சம் வழங்குவதைத் தடுக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளது என்றும், முன்னர் அரச துறையில் இலஞ்சம் அல்லது ஊழலுக்கு எதிராக மட்டுமே ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க முடிந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஆணைக்குழுவின் அனுமதியுடன் அதிகாரிகளால் தனியார் துறையில் இலஞ்ச ஊழல் தொடர்பான முதலாவது சுற்றிவளைப்பு நேற்று வெள்ளிக்கிழமை (26) நடத்தப்பட்டது.
பெண் ஊழியரான இளம் யுவதியிடம் பாலியல் இலஞ்சம் கேட்டதாக தனியார் ஹோட்டல் மனித வள மேலாளராகவும், கணக்காளராகம் செயற்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
மஹவிலச்சிய பிரதேசத்தை சேர்ந்த யுவதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு, தற்போதைய சேவைக் கட்டணத்தில் 75% முழுவதுமாக செலுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் உயர் அதிகாரிகளால் அவரது வேலை உறுதி செய்யப்படுவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
மேலும், எந்த பிரச்சனையும் இன்றி அவரது பணியை தொடர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
பதிலுக்கு, ஹோட்டலின் கணக்காளர் தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டுமென யுவதியிடம் தெரிவித்து, அந்த யுவதியை ஹபரணையில் உள்ள தனியார் ஹோட்டல் அறைக்கு அழைத்து வந்துள்ளார்.
யுவதியுடன் ஹொட்டல் அறைக்குள் அழைத்து சென்ற கணக்காளரை இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்ததுடன், கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.