இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு முக்கிய பங்கு இருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் தெரிவித்துள்ளது.
இதனை நிரூபிப்பதற்கான பெருமளவு ஆதாரங்கள் வெளிவந்துள்ளதாக என அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலப் பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அக்கறையுடன் இருக்குமாயின், போர்க் குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் கோட்டாபாய ராஜபக்சவுக்கு இருந்த வகிபாகம் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலராக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2009 ஆம் ஆண்டு சண்டைக் களத்திலிருந்த தளபதிகளுக்கு கட்டளைகளை வழங்கியமைக்கான விரிவான ஆதாரங்களை இந்த புதிய அறிக்கை கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச இராணுவத் தளபதியாக இல்லாத போதிலும், பாதுகாப்புப் படைகளுக்கு கட்டளையிட்டதுடன், அவர்கள் மீதான செயற்திறன் மிக்க கட்டுப்பாட்டினையும் கொண்டிருந்தார்.
சர்வதேச மனிதாபிமானச் சட்டமும் சர்வதேச குற்றவியல் சட்டமும் மீறப்பட்டுக் கொண்டிருந்தமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச அறிந்திருந்தாலும், அவற்றைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனக்குக் கீழே செயற்பட்டவர்களைப் பொறுப்புக் கூறவைக்க முயலவுமில்லை என்பதை இந்த அறிக்கை காட்டுகின்றது.
பாரதூரமான மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நம்பகரமாக விசாரணைகளைத் தொடங்குவதற்கும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் போர் முடிந்த பின்னர் அவருக்கும், தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புக்கள் இருந்தன.
உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக, கோட்டாபாயவும் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த அதிபர்களும் பாதுகாப்புப் படைகள் இந்த மீறல்களில் ஈடுபட்டமையை முழுமையாக மறுத்ததுடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில், தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகவும் மோசமானவராக கோட்டாபய ராஜபக்ச இருக்க முடியும் என யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியுள்ளார்.
1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சந்தேக நபர்கள் அல்லது குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பும் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், இதுவரை அவற்றின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏமாற்றத்தினையும் இலங்கை அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளிவந்த அறிக்கை