உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை தேடுவதற்கு முயற்சிக்கவேண்டாம் – கிடைக்கப்போவதும் இல்லை. ஏனெனில், இலங்கையில் இதற்கு முன்னர் பெருமளவில் உயிர்கள் இழக்கப்பட்ட போதும் அந்த சூத்திரதாரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறீகொத்தாவில் நேற்று
அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையி லயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லைஎன கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த விடயம் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டியதாகும். உயிர் ஒன்று இல்லாமல் போனால் அதற்கு நியாயம் கிடைப்பதில்லை. பணத்தால் அதனை மதிப்பிட முடியாது. இலங்கையில் பெருமளவில் உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இழக்கப்பட்ட உயிர்களின் எந்தவொரு சூத்திரதாரியையும் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அதனால் தேடுவதற்கு முயற்சிக்கவும் வேண்டாம் – கிடைக்கப்போவதும் இல்லை. இலங்கையின் பாதுகாப்பு முக்கியமாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என பாராளுமன்றத் தலைவர்கள் 125பேர் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் கொலை சூத்திரதாரிகளில் ஒரு சிலரையேனும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது – துப்பாகிதாரி ஒருவரைக் கூட கண்டு பிடிக்க முடியாமல் போயிருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னாலும் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அரசர்கள்கூட கொலை செய்யப்பட்டனர். எனவேதான், இலங்கையின் ஜனநாயகமும் எஞ்சியிருக்கும் அரச தலைவர்களும் அழிக்கப்படுவதற்கு இடமளிக்காமல் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் – சகல அரசியல் கட்சிகளும் தேசிய மட்டத்தில் ஒற்றுமையாக செயல்படுவதற்கு ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
மத வழிபாட்டின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த சம்பவம், இலங்கையில் இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னர் அரந்தலாவை பிக்குகள் கொலை செய்யப்பட்டமை, தலதாமாளிகை மீதான தாக்குதல் இதே போன்று தமிழ், முஸ்லிம் மத வழிபாடு களின்போதும் தாக்குதல்களில் உயிர்கள் இழக்கப்பட்டன. அதனால் இந்த கலாசரரத்தில் இருந்து மீள்வதற்காக ஒற்றுமையாக செயல்பட முன்வருமாறு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுக்கிறார் – என்றார்.