பாகிஸ்தானுக்கு இந்திய முக்கிய தகவலைகளை வழங்கிய குற்றச்சாட்டில், இந்திய தூதரக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டம், ஷாமொகைதீன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யேந்திர சிவல்.
இந்திய வெளியுறவு துறையில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பெண் உளவாளியின் காதல் வலையில் சத்யேந்திர சிவல் சிக்கியுள்ளார்.
பெண் உளவாளியின் அழகில் மயங்கிய அவர், இந்திய பாதுகாப்பு துறை, இராணுவ கட்டமைப்புகள், இந்திய வெளியுறவு துறை குறித்த ரகசிய தகவல்களை அந்த பெண்ணிடம் பகிர்ந்துள்ளார். இதற்கு பிரதிபலனாக, சத்யேந்திர சிவலுக்கு பணம், பரிசு பொருட்களை பெண் உளவாளி அனுப்பியுள்ளார்.
இந்த சூழலில், உத்தர பிரதேசகாவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரின் டிஜிட்டல் கண்காணிப்பில், சத்யேந்திர சிவலின் நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்கள் குறித்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிஸார், அவரை மிக தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர். இதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐஉளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை சத்யேந்திர சிவல் பகிர்ந்து வருவது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து உத்தர பிரதேசத்தின் மீரட் நகருக்கு அவர் உடனடியாக வரவழைக்கப்பட்டார். விசாரணையில், உண்மையை அவர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 2-ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.