பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை
அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான மற்றொரு தொகுதி ரிக்கெற் விற்பனையும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளது.
32 வகையான விளையாட்டுகளில் 329 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில்
வழங்கப்படவுள்ள பதக்கங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த வருடம் ஆரம்பமாகியது. ஏற்கெனவே 7
மில்லியன்களுக்கும் அதிகமான ரிக்கெற்றுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மற்றொரு தொகுதி டிக்கெட் விற்பனை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
https://tickets.paris2024.org எனும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் ரிக்கெற் விற்பனைக்கான உத்தியோகபூர்வ
இணையத்தளத்தின் ஊடாக ரிக்கெற்றுகளை கொள்வனவு செய்யலாம்.
எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள பராலிம்பிக் போட்டிகளுக்கான ரிக்கெற்றுகளும் மேற்படி இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான 45 சதவீதமான ரிக்கெற்றுகளின் விலை தலா 100 யூரோவுக்கு குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உத்தியோகபூர்வ இணையத்தளம் தவிர்ந்த வேறு மூலங்கள் ஊடாக ரிக்கெற் கொள்வனவு
செய்ய முற்படும் போது, ரிக்கெட் விநியோகிக்கப்படாமை, அத்தகைய ரிக்கெற்றுகளை வாங்கியவர்கள் பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களால் விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்படாமை போன்ற
ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடலாம் என ஏற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், உத்தியோகபூர்வ தளங்களுக்கு வெளியில் ரிக்கெற்றுகளை வாங்குவதும் மீள் விற்பனை செய்வதும் பிரெஞ்சு சட்டப்படி குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்கெற்றுகளை வாங்கியோர் அவற்றை மீள்விற்பனை செய்வதற்கான உத்தியோகபூர்வ தளமொன்று இளவேனிற் காலத்தில் (மார்ச் இறுதியில்) திறக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.