சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபர்களை ஓன்லைன் முறையின் மூலம் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கான சட்டத் திருத்தத்தை நீதி அமைச்சு மேற்கொண்டு வருகிறது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் குற்றத்தடுப்பு அலுவலகத்தின் அனுசரணையுடன் தென் மாகாணத்தில் இந்த வேலைத்திட்டம் சம்பிரதாயபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், நாடளாவிய ரீதியில் இதனை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி, உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் சனிக்கிழமையன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே உபுல்தெனிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் :
கோவிட் தொற்றுநோய்க்கு கைதிகள் பலியாவது உட்பட பல காரணிகளால், கொவிட் காலத்தில் சிறையில் உள்ள சந்தேக நபர்களை ஓன்லைன் அமைப்பின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய துடன், அதன் நேர்மறையான அம்சங்களை மையமாகக் கொண்டு, புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக் கொள்ளும் வழக்குகளில், தற்போது ‘ஸும்’ தொழில்நுட்பம் மூலம் கைதிகளின் விசாரணை திகதியினை நீட்டிப்பது போன்ற விஷயங்களைச் செய்து வருகின்றனர் எனவும் இதன் மூலம் கடுமையான குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் சிக்கல்களை குறைக்க முடியும் எனவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.