சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஹோட்டல் ஒன்றில் குமாஸ்தாவாக பணியாற்றும் இளம் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் தம்புள்ளை ஹோட்டல் குழுமத்தின் மனித வள முகாமையாளரான 59 வயதுடைய நபரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான திஸாநாயக்க முதியன்சேலாகே திஸாநாயக்க என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 47(5) பிரிவின் பிரகாரம் தனியார் துறையில் இலஞ்சம் பெற்றமை தொடர்பான முதலாவது வழக்கின் பிரகாரம் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023 ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் 162ஆவது பிரிவின் பிரகாரம், பாலியல் துன்புறுத்தல் குற்றத்தைச் செய்ததற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் திருமதி சம்பந்தப்பெரும தெரிவித்தார்.
இளம் பணிப்பெண்ணுக்கு 75 சதவீத கொடுப்பனவு வழங்கவும், சம்பளத்தை அதிகரிக்கவும் சந்தேக நபர் பாலியல் இலஞ்சம் கோரியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஹபரணையில் ஹோட்டல் அறையை முன்பதிவு செய்ய அப்பெண் அழைத்த போது அங்கு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
முறைப்பாட்டாளரான அப்பெண் ஒரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்ததாகவம் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அப்போது அதே ஹோட்டலில் இருந்த நபர், ஹோட்டல் மேலாளருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான வாக்குமூலங்களை பதிவு செய்து விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியது. அதனடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.