மதத்தலைவர்கள் எங்களது போராட்டங்களில் பங்குகொள்வதென்பது தமிழர்களின் போராட்டங்களை வலுச்சேர்ப்பதாக அமையும். அரசியல், ஆன்மீகம், பெண்கள், இளைஞர்கள் என்ற பலதரப்பட்ட பலங்களைக் கொண்டு போராட்டம் செய்யும் போதே அந்தப் போராட்டம் வெற்றியாகும்.
அன்று வேலன் சுவாமிகளுக்கு நடந்த விடயத்திற்கு நாங்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கருத்து தெரிவித்தார்.
அண்மையில் மட்டக்களப்பில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தை இலங்கை அரசு நடாத்தியிருந்தது. வீதியெங்கும் மின்கம்பங்கள் தோறும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஆனால் அன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சம்மந்தமாக எந்தெவொரு தீர்வும் காணப்படவில்லை நீதியும் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் அன்றைய சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகளுடன் இணைந்து துக்க நாளாக அகிம்சை ரீதியாக அனுஸ்டிக்க இருந்தார்கள்.
ஆனால் அன்றைய சுதந்திர தினத்திலும் கூட அந்த உறவுகளின் அகிம்சை ரீதியான நடமாடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பனவும் மறுக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை சுதந்திரமடைந்து சுமார் முக்கால் நூற்றாண்டு கடந்து கொண்டாட்டங்களைச் செய்திருந்தாலும், இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களின் உரிமை சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை என்பது அன்றைய தினம் எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. பொலிசார் மிகவும் கெடுபிடியாக அன்றைய தினம் செயற்பட்ட விதம் மக்களை எப்படியாவது அடக்கி ஒடுக்க வேண்டும் என்று செயற்பட்டார்கள். அது மாத்திரமல்லாமல் கிளிநொச்சியிலும் இடம்பெற்ற போராட்டத்தின் போதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றும் பாராமல் அங்கு மிகவும் கெடுபிடியான விதத்தில் அந்தப் போராட்த்தை அடக்கியிருந்தார்கள்.
எனவே இந்த நாடு வெறுமனே காட்சிப் பொருளாக இந்த சுதந்திரதினத்தை அனுஸ்டிக்கின்றதே தவிர அதனை ஒரு அர்த்தமுள்ள கருத்துப் பொருளாக எண்ணவில்லை என்றே சொல்ல வேண்டும்.
நாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருந்த வேளை சுமார் 17 அரசியல் சார்ந்தவர்களுக்கு இரவோடு இரவாக நீதிமன்றத் தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது மாத்தரமல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. கடந்த காலத்தில் இடப்பட்ட வழக்குகள் இரண்டு நிலுவையிலும் இருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கஸ்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக நாங்கள் அன்றைய போராட்டத்தைத் தவிர்த்திருந்தோம்.
இந்த நிலையில் குறிப்பிட்ட போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடாது என்பதைக் கருத்திற் கொண்டு அங்கு வடக்கில் இருந்து வேலன் சுவாமிகள் வந்திருந்தார். யாராக இருந்தாலும் எமது இன விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பவர்களை நாங்கள் கௌரவிக்க வேண்டும். மரியாதை அளிக்க வேண்டும். அந்த விடயத்தில் யாராக இருந்தாலும் எங்களை விட மரியாதைக்குரியவர்களாக அவர்களைக் கருத வேண்டும்.
மதத்தலைவர்கள் எங்களது போராட்டங்களில் பங்குகொள்வதென்பது தமிழர்களின் போராட்டங்களை வலுச்சேர்ப்பதாக அமையும். அரசியல், ஆன்மீகம், பெண்கள், இளைஞர்கள் என்ற பலதரப்பட்ட பலங்களைக் கொண்டு போராட்டம் செய்யும் போதே அந்தப் போராட்டம் வெற்றியாகும்.
அன்று வேலன் சுவாமிகளுக்கு நடந்த விடயத்திற்கு நாங்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம். ஏனெனில் அவர் மிகவும் மனம்நொந்திருந்தார். அவர் ஆன்மீகத் துறவி என்ற ரீதியில் மக்களுக்கு ஒரு பாதுகாப்பாகவே வந்திருந்தாகவும் தான் இந்தப் போராட்டத்தை குழப்ப வரவில்லை என்றவாறு மனம் நொந்து எங்களுடன் உரையாடியிருந்தார். நாங்கள் அவரிடம் மட்டக்களப்பு என்ற ரீதியிலும் தமிழரசுக் கட்சி சார்பிலும் மன்னிப்பினைக் கோரியிருந்தோம்.
பிரதேசவாதம் பேசிக்கொண்டு இலகுவான அரசியல் செய்யும் சந்திரகாந்தனைப் போன்றவர்கள் ஆன்மீகவாதிகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறுவதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர்கள் அதைத்தான் சொல்ல வேண்டும். அவர்கள் பேரினாவதிகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வேலை செய்கின்றவர்கள். அவர்களிடம் உருப்படியான கொள்கை கோட்பாடுகள் இல்லை. ஆனால் எங்களுடைய கட்சியைப் பொருத்தமட்டில் அவ்வாறில்லை.
அரசியலில் வெற்றிடங்கள் ஏற்படும் போதெல்லாம் ஆன்மீக ரீதியில் மதகுருமார்கள் பலர் தங்கள் ஆனமீகக் குரல் மூலம் அந்த வெற்றிடங்களை நிரப்பியிருக்கின்றார்கள். இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதைத் துணிந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறானவர்கள் எங்களது உரிமைப் போராட்டத்தில் பெரிய சொத்துக்கள். இவர்களை நாங்கள் இழக்கக் கூடாது.
பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலில் பயணிப்பவர்கள் பிரதேசவாதம் பேசுவார்கள், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்பார்கள், திருகோணமலை அம்பாறை என்பார்கள் இறுதியில் அவர்கள் ஊரை மாத்திரம் மையமாக வைத்தே அரசியல் செய்வார்கள். ஆனால் தமிழரசுக் கட்சியில் பயணிப்பவர்கள், தமிழ்த் தேசியப் பாதைகளில் பயணிப்பவர்கள் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இனிவரும் காலங்களில் எங்களின் போராட்ங்களுக்கு வலுச் சேர்ப்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.