“இயற்கையை நேசிப்போம் பிளாஸ்டிக்கை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட சித்தரப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் சித்திர கண்காட்சி மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களின் விற்பனையும் கண்காட்சியும் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
வை எம் சி ஏ நிறுவனத்தின் பதில் பொது செயலாளர் பெற்றிக் அவர்களின் ஒருங்கிணைப்பில், அதன் தலைவர் தர்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் “இயற்கை நேசிப்போம் பிளாஸ்டிக்கை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மட்டத்தில் மணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பணப் பரிசில்களும், சான்றிதழ்கள் மற்றும் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களினால் வரையப்பட்ட சித்திரங்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன.
இக் கண்காட்சி நிகழ்வுடன் மாற்றுத்திறனாளிகளின் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
வை.எம்.சி.ஏ நிறுவனம் சுற்று சூழலை பாதுகாக்கும் செயல் திட்டத்தின் ஊடாக பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.