மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் இன்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் இரண்டு வடி ரக வாகனங்களின் சாரதிகள் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (9) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் ஏறாவூர் 4ஆம் குறிச்சியைச் சேர்ந்த சண்முகராசா சுதர்ஷன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நகைக் கடை கூலித் தொழிலாளி என்பதோடு, அவர் 4 வயது பிள்ளை மற்றும் 6 மாத குழந்தையின் தந்தையுமாவார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்தபோது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடி ரக வாகனத்தை கடக்க முற்பட்டுள்ளார்.
அப்போது அதன் சாரதி திடீரென வாகனத்தின் கதவை திறந்துள்ளார். கதவின் பலமான தள்ளுகையினால் வீதியில் நிலை தடுமாறி அந்த நபர் விழுந்துள்ளார்.
அவ்வேளை பின்னால் வந்த மற்றொரு வடி ரக வாகனம் வீதியில் விழுந்த நபர் மீதேறிச் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த நபர் அங்கிருந்தவர்களால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றாய்வுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று ஐயன்கேணி மணிபுரம் பொது மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.