தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல பால் பண்ணை விளைநிலங்களை இந்தியாவில் அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டியில் மக்கள் மனுவொன்றில் கையொப்பம் சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க , அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரும், பால் பண்ணை நிலங்களை பாதுகாப்பதற்காக மக்கள் அமைப்பின் தொடர்பான பிரதிநிதியுமான நாமல் கருணாரத்ன உள்ளிட்ட சிலர் இந்தியாவின் குஜராத்தில் உள்ள அமுல் நிறுவன கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் இவ்வாறான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 32 பண்ணைகள், 97 பால் நிலையங்கள் மற்றும் மில்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான 05 பால் தொழிற்சாலைகளில் 28802 ஏக்கர் நிலங்களை அமுல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதுடன், அமுல் பிரதிநிதிகள் தற்போது நிலம் மற்றும் தொழிற்சாலைகளை பார்வையிட்டு வருகின்றதாக நாமல் கருணாரத்ன இங்கு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் பெறுமதியான வளங்களை தொடக்கூடாது என அமுல் நிறுவனத்திற்கு செய்தியொன்று விடுவதாகவும், தேசிய வளங்களை விற்பனை செய்வதை தடுக்க அரசாங்கம் செயற்படாவிட்டால் விவசாயிகளுடன் கொழும்புக்கு வருவேன் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அமுல் பால் நிறுவனத்தை அவதானிக்க சென்ற போது, நாட்டின் வளங்களை அமுலுக்கு விற்பதற்கு எதிரான பொது மனுவில் கையொப்பமிடுவது குறித்து நீங்களும் உங்கள் குழுவினரும் என்ன கூறுகின்றீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திரு நாமல் கருணாரத்ன, அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
மேலும் பல தொழிற்சங்கங்கள் பொது மனுவில் கையெழுத்திட வந்துள்ளதாகவும், அந்த நாட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அனுரகுமார திஸாநாயக்க இந்தியா சென்றதாகவும்,குறிப்பிட்டார்.
மேலும் இன்னும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த நாட்டில் முற்றிலும் மாறுபட்ட ஆட்சி உருவாகும் என்பதை சர்வதேச சமூகம் கூட ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எமது ஆட்சி வந்ததும் இந்த நாட்டின் வளங்களை அபகரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அவைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.