கடந்த 2022ஆம் ஆண்டு அட்டலுகம பகுதியில் ஆயிஷா என்ற 9 வயதுடைய சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.
பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் முழு நாட்டையும் உலுக்கிய கொடூரச் சம்பவமாக பதிவானது.
கோழி வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுதினம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபருக்கு இன்றையதினம் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி!
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 2022.05.27 ஆம் திகதி காணாமல்போய், 05.28 மாலை சடலமாக 9 வயதான சிறுமி ஆயிஷா என்னும் சிறுமி மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொஹமட் பாரூக் என்ற 29 வயதுடைய சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையான மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், கூலி வேலை செய்து அப்பகுதியில் வசிப்பதாகவும், அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் 2022 ஆம் ஆண்டு பொலிஸாரின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
8, 5 மற்றும் 3 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், 9 வயது சிறுமி பாத்திமாவை அருகில் உள்ள கடையில் இருந்து கோழிக்கறி வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்து கொண்டிருந்த போதே கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்திருந்தது.
உயிரிழந்த சிறுமி சந்தேகநபரின் குழந்தையின் தோழி எனவும், சந்தேகநபரின் மாமா இறந்த சிறுமியின் தாயின் சகோதரியை திருமணம் செய்துள்ளதாகவும், சிறுமி ஆயிஷா கோழியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்யும் நோக்கில் சதுப்பு நிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சந்தேகநபரின் பிடியிலிருந்து சிறுமி தப்பிக்க முயன்ற போது சிறுமியின் வாயில் துணியை திணித்து, சில மீட்டர் தூரம் இழுத்து சென்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் தள்ளி, சிறுமியின் முதுகில் மண்டியிட்டு இறக்கும் வரை இருந்ததாகவும் அந்நேர மூத்த பொலிஸ் அதிகாரியின் விசாரணையில் தெரியவந்திருந்தது.
இந்த நிலையில் சிறுமி வீட்டிற்கு சென்று தாய் அல்லது தந்தையிடம் கூறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தேகம் அடைந்து சதுப்பு நிலத்தில் சிறுமியை தள்ளி கொலை செய்திருந்தார் மொஹமட் பாரூக்.