மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதிகளில் காடுகளுக்கு தீ வைக்கப்படுவதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை நிலங்களுக்கு சட்டவிரோத குடியிருப்பாளர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதோடு இரசாயன பதார்த்தங்களையும் பாவித்துள்ளதால் மாடுகள் உயிரிழப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ச்சியாக மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து வரும் நிலையில் தற்போது மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தினால் சட்டவிரோத குடியிருப்பாளர்களால் பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு எல்லையில் உள்ள மேய்ச்சல் தரை நிலங்களில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் அவர்களது பகுதிகளிலேயே விவசாயம் செய்ய காணிகளை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் மேய்ச்சல் தரை நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோத குடியிருப்பாளர்களை தடுப்பதற்காக தனியான பொலிஸ் நிலையம் ஒன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போதிலும் இவற்றை எல்லாம் மீறி அப்பகுதியில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு பயிர் செய்கை நடவடிக்கைகளில் அத்துமீறிய பயிர் செய்கையாளர்கள் ஈடுபட்டு வருகின்றதாக மயிலத்தமடு பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.