காத்தான்குடி சுஹதா வித்தியாலய மாணவர்களுக்கு கிட்டி சின்னம் சூட்டும் விழா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா ஜுலேக்கா முரளிதரனின் பங்குபற்றுதலுடன் நேற்றுமமுன்தினம் (16) திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.முனீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு கடந்த 2023ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் தகைமை பெற்ற மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை கௌரவித்தல், தரம் 5 மாணவர்களின் பிரியாவிடை, உதயதாரகை, சுஹதா சஞ்சிகைகள் வெளியீடு மற்றும் கிட்டி சின்னம் சூட்டும் நிகழ்வு என நாற்பெரும் விழாக்களாகக் கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கௌரவத்தினை வழங்கி வைத்தார்.
இதன்போது கலை நிகழ்வுகளான அறபு கஸீதா, நாட்டார் பாடல், நடனம் என பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் மாணவர்கள் சபையோர் முன்னிலையில் தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
மேலும் புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய 9 மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களை நெறிப்படுத்திய தரம் 5 ஆசிரியர்களுக்கான கௌரவமும் அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதுதவிர சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலுதவி பயிற்சியினை நிறைவு செய்த 47 மாணவர்களுக்கு கிட்டி சின்னம் சூட்டப்பட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம், சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மாவட்ட தலைவர் தேசபந்து அல்ஹாஜ் ஏ.எல்.எம்.மீராசாஹிபு, சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மாவட்ட ஆணையாளரும் பயிற்றுவிப்பாளருமான எஸ்.எல்.எச்.எம். இனாமுல்லா, ஓய்வு பெற்ற காத்தான்குடி பிரதேச கல்வி அதிகார எம்.ஏ.சீ.எம்.பதுறுதீன், காத்தான்குடி ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வின்போது பிரசன்னமாயிருந்தனர்.