தென்னிந்திய நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டமை குறித்து பத்திரிகையாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை இரத்து செய்ய முடியாது எனவும் அவர் மீதான வழக்கை எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று(19) தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.