செங்கலடியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக நடைபெறுகிறது என கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (19) மட்டக்களப்பு கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அமைப்பின் செயலாளர் ஞானப்பிரகாசம் யூலியன் ஜெயப்பிரகா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கனிப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் உள்ளது.
ஆனால் செங்கலடி பிரதேச செயலக வீதியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தும் நபர்களுக்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இரண்டு வருடங்களாக மண் அனுமதி பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தான்.
இன்று வந்து போராட்டம் நடாத்துவதன் நோக்கம் என்ன? ஒருவேளை மண் அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதை விரும்பாதவர்கள் ஒரு சிலரின் தூண்டுதலில் இவ்வாறான போராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா? என்ற எண்ணமும் எங்கள் மனதில் எழுகின்றது என்று மேலும் தெரிவித்தார்.