சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்துவதால் சேவைகளை பெறுவதற்கு செல்லும் மக்கள் இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-528.png)
அந்தவகையில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றையதினம் (20) கரம் போட்டிகள் பிரதேச செயலகத்தில் நடைபெற்றன. எதிர்காலத்தில் கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்த போட்டிகளில் பங்குகொள்ளும் உத்தியோகத்தர்கள் தமது அலுவலகங்களான கிராம சேவகர் அலுவலகம், சமுர்த்தி அலுவலகம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான அலுவலகங்களுக்கு செல்லாது போட்டிகளில் பங்குபற்றி விளையாடி வருகின்றனர்.
உத்தியோகத்தர்களை சந்திக்க வேண்டிய தேவையுள்ள மக்களை பிரதேச செயலகத்திற்கு அழைத்து, மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்குகின்றனர். இதனால் மக்கள் வீண் அலைச்சல்களை எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாறான போட்டிகளை மக்களுக்கு சேவை செய்யும் நேரத்தில் நடாத்தாது, அலுவலக நேரம் முடிந்த பின்னர், அல்லது விடுமுறை தினங்களில் நடாத்தினால் மக்களது சேவைகள் பாதிக்காது செயற்பட முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.