கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 29 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்வுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடக அமையத்தினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தற்போது சிறிலங்கா அரசு முன்வைத்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும்.ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளைச் சுதந்திரமாக மேற்கொள்வது என்பது கேள்விக்குள்ளாகும்.
எனவே, குறித்த சட்டமூலத்துக்கு எதிராகக் கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்குக் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
அதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடக அமைப்புக்களின் ஆதரவையும் கோரி நிற்கின்றோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.