மட்டக்களப்பு ஏறாவூர் கடற்கரை பகுதியில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான பெருமளவு சட்ட விரோத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (25) சட்டவிரோத சுருக்கு வலைகளை கண்டுபிடிப்பதற்கான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே இந்த வலைகளும் தோணிகளும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையிலேயே கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து ஏறாவூர், குடியிருப்பு கடற்கரை பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது கடற்கரையில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்ட விரோத வலைகளும், இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 தோணிகளும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட வலைகள், தோணிகளுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், அவை கல்லடியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள காரியாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வலைகள் மற்றும் தோணிகளை நாளை திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.