செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடுத்த பயணத்தில் இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோனின் சாயலில் ஹெலிகொப்டர்களை அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் பெப்ரவரியில் நாசாவின் இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோன் செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது, இதன்மூலமாக செவ்வாய் வளிமண்டலத்தில் விமானத்தை தரையிறக்குவது சாத்தியமான விடயம் என்பதை நாசா நிரூபித்துக்காட்டியிருந்தது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-699-1024x576.png)
அதனைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (ISRO) தற்போது இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோனின் சாயலில் ஹெலிகொப்டர்களை செவ்வாய்க்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் மங்கள்யான் லாண்டருடன் இணைந்து இந்த ஹெலிகாப்டர்களை செவ்வாய்க்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பரில் செவ்வாய்க்கு ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலமானது 2014 ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர் 08 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இந்த விண்கலம் கடந்த 2022 ஆம் ஆண்டு பூமியுடனான தனது தொடர்பினை துண்டித்துக்கொண்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-700-1024x576.png)
எவ்வாறாயினும், இஸ்ரோ தனது முயற்சிகளை கைவிடாமல் மீண்டும் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது, இப்போது விண்கலத்துடன் இணைந்ததாக ஹெலிகொப்டர் ஐயும் செவ்வாய்க்கு அனுப்பும் முயற்சி தீவிரமடைந்து வருகிறது.
இந்த முயற்சியில் பறக்கும் ட்ரோனுக்கான திட்டமிடப்பட்ட அறிவியல் பேலோடுகளில் வெப்பநிலை சென்சர், ஈரப்பதம் சென்சர், அமுக்க சென்சர், காற்றின் வேக சென்சர், மின் புல சென்சர் மற்றும் தூசி ஏரோசோல்களின் செங்குத்து விநியோகத்தை அளவிடக்கூடிய தூசு சென்சர் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு ட்ரோனுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிரவும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை ஆராய்வதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 328 அடி (100 மீட்டர்) வரை பறக்கும் திறன் கொண்டதாக இந்த ட்ரோன் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-701-1024x576.png)