மட்டக்களப்பில் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான LIFT நிறுவனத்தின் “நகர்ப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரித்தல்” எனும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக “அம்மா வீடு” சிறுவர் பராமரிப்பு நிலையம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
நேற்று (27) திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வு, LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்றதுடன், இவ் வேலைத்திட்டத்திற்கு நிதி வழங்கிய மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதிகளாக சிரஞ்சீவி மற்றும் அவரது பாரியார் சாந்தி ஆகியோர் கௌரவ அதிதிகளாக வருகை தந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
திறந்து வைக்கப்பட்ட இக் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் மூலமாக வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தமது குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளை பல பெண்களுக்கு இந்நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளதாகவும் LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இவ்வாறான ஓர் நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகவும் தேவையானது எனவும், அதனை சிறந்த முறையில் உருவாக்கியுள்ள LIFT நிறுவனத்தினைப் பாராட்டுவதாகவும் அரசாங்க அதிபர் தனதுரையில் தெரிவித்தார்.
அதேசமயம் இந்நிலையத்தில் 3 மாதக் குழந்தையிலிருந்து பராமரிக்கும் வசதி காணப்படுகின்றதுடன்,
இந்நிலையத்தின் உருவாக்கத்தில் தனித்து நின்று அத்தனை வேலைகளையும் செய்து முடித்த பிறிஸ்லி றோய் இற்கு LIFT நிறுவனத்தினால் பாராட்டு பாமாலை வாசித்து கௌரவம் வழங்கப்பட்டது.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 முதல் மாலை 5:30 மணிவரை பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.