முன்பிள்ளை பருவம் முதல் வயது வந்தோர் வரை பாலினம் தொடர்பான கல்வியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கல்வி வெளியீடுகளை எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திலேயே கல்வி அமைச்சின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
முன்பள்ளி மாணவர்கள் முதல் 13ஆம் தரம் வரையிலான பாடசாலை மாணவர்கள் வரையிலும், வயது வந்தவர்களுக்காகவும் இந்த வெளியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டத்தின் கீழ் பாலினம் தொடர்பான கல்வி வெளியீடுகளை இலத்திரனியல் வெளியீடுகளாக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சமூகத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் பாலினம் பற்றிய அறிவை முறையாக வழங்குவதன் மூலம், சமூகத்தில் உருவாகி வரும் பல நெருக்கடிகளை களைய முடியும் எனவும், இதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.