சேலை கட்டுவதில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு இன்று விவாகரத்திற்கே சென்றுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர் தீபக். ஹத்ராஸ் மாவட்டத்தில் வசித்த பெண் ஒருவருடன் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சிறிது காலம் தம்பதியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.
இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே சச்சரவுகள் ஏற்பட்டன. தீபக் கூறிய விசயங்களை மனைவி கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சேலையையே கட்ட வேண்டும் என தீபக் கூறியிருக்கிறார். ஆனால், அவருடைய மனைவி அதற்கு மறுத்து விட்டார். தீபக் விரும்பிய சேலைகளை கட்ட மனைவி மறுத்ததுடன், சேலை கட்டுவதில் தன்னுடைய விருப்பத்துக்கே முன்னுரிமை கொடுத்து அதில் பிடிவாதத்துடன் இருந்துள்ளார்.
இதனால், அவர்களிடையே தினமும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இவர்களின் விவகாரம் குடும்ப ஆலோசனை மையத்திற்கு சென்றது. இவர்கள் விசயத்தில் தீர்வு காண ஆலோசகர்கள் முடிந்தவரை முயன்றனர். எனினும், பலகட்டங்களாக நடந்த ஆலோசனை வழங்கும் நிகழ்வுகளில் தம்பதிக்கு தீர்வு கிடைக்காமலேயே இருந்தது. அவர்கள் விட்டு கொடுப்பதுபோன்று தெரியவில்லை.
இதனை தொடர்ந்து, காவல்துறையை அணுகிய அவர்கள், விவாகரத்து செய்யும் முடிவை தெரிவித்தனர். அந்த தம்பதியின் குடும்பத்தினர், இருவரும் சேர்ந்து வாழ்வதற்காக கடுமையான முயற்சியை மேற்கொண்டனர்.ஆனால், சேலை தகராறு தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது என அவர்கள் தெரிவித்தனர்.