நாட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த 2022 ஆம் ஆண்டில் 1,232 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியிருந்தன. அத்தோடு 2023 ஆம் ஆண்டில் 1,497 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகின.
இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் 16 வயதுக்குட்பட்ட 110 முதல் 112 வரையிலான சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.
நீதிமன்றில் பதிவாகியுள்ள வழக்குகள் அடிப்படையில் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகளவில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி வருவதாக தெரியவருகிறது.
இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்களில் சிலர் அவர்களது தண்டனை காலம் முடிவைந்த பின்னர் மீண்டும் சமூகத்திற்குள் வந்து அந்த தவறுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.
ஆகவே இவ்வாறு தண்டனை பெற்று மீண்டும் சமூகத்திற்குள் வரும் நபர்களிடம் இருந்து சிறுமிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.