137 ஆவது சர்வதேச தொழிலாளர்தினம் (மே.1) இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏனைய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இலங்கையை பொறுத்தவரையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தை காண்பிக்கக்கூடிய வகையில் அல்லாமல், பிரதான கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆங்காங்கே கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
கொழும்பு, கண்டி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி கூட்டங்கள் இன்றையதினம் நடத்தப்படவுள்ளன. மலையகத்தில் பிரமாண்டமான மேதின ஊர்வலங்கள் இம்முறை இல்லை. எனினும், ஆங்காங்கே கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம், கொழும்பு- 14 சுதந்திர சதுக்க உள்ளக அரங்கில் நடைபெறும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமும் பேரணியும் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் கொழும்பு, ஏ.ஆர். குணசிங்ஹ விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம், கிளிநொச்சியில் நடைபெறும். சுதந்திர மக்கள் சபையின் மே தினக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமவின் தலைமையில் கண்டி சேர்க்கஸ் பூங்காவில் நடைபெறும். கொழும்பு ஹட்பாக்கில், உத்தர லங்கா சபையின் மேதினக் கூட்டம் நடைபெறுமென அறிவித்துள்ள விமல் வீரவங்ச எம்.பி, அந்தக் கூட்டத்தில் சபையில் அங்கம் வகிக்கும் சகல தலைவர்களும் உரையாற்றுவார்கள் என்றார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மேதினக் கூட்டம் கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெறும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் கண்டியில் நடைபெறும்.
முன்னிலை சோஷலிஸ கட்சியின் மேதின பேரணி நுகேகொடையில் நடைபெறும். மலையகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இம்முறை மேதின கூட்டங்கள் மற்றும் பேரணிகளை பிரமாண்டமாக நடத்தவில்லை. பிரதேசங்களிலும் தோட்டங்களிலும் மேதின நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. கொழும்பில் நடத்தவிருக்கும் பேரணி்கள்,கூட்டங்கள் ஆகியவற்றைமுன்னிட்டு, விசேடபோக்குவரத்து ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.