இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஏற்கத்தக்கது அல்ல என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமுல்படுத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
ஏற்கனவே, மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இந்திய முழுவதும் CAA சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உட்பட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகமும் இந்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் சி.ஏ.ஏ-வை நடைமுறைப்படுத்த மாட்டோம்’ என்று தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்கள் தீர்மானித்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?
பொதுவாக ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்வதன் மூலமாக கிடைக்கும் உரிமைகளென பார்த்தால், ‘அந்த நாட்டுக்குள் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாக குடியேறலாம் – தகுதியை வளர்த்துக்கொண்டு அந்த நாட்டின் அரசு வேலையில சேரலாம் – எந்நேரம் வேண்டுமென்றாலும் நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சமின்றி நிம்மதியாக வாழலாம்’ ஆகியவைதான். இவை எல்லாவற்றுக்கும் மேல், வாக்குரிமை மூலமாக, அந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை அந்நபர் முடிவு செய்யலாம்.
இப்படிப்பட்ட குடியுரிமையை பிறப்பின் மூலமாக, வம்சாவளியாக இருப்பதன் மூலமாக, பதிவு செய்யுறது மூலமாக என்று மட்டுமில்லாமல், குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசே, அந்த நாட்டின் குடியுரிமை பெறும் வழிகளை தளர்த்துவது மூலமாகவும் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு தளர்வு வழிதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம்¸ 2019.
2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்த மதச் சிறுபான்மையினருக்கு (உதாரணத்துக்கு, குறிப்பிட்ட ஒரு நாட்டில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்தால், அங்குள்ள முஸ்லீம்கள் அல்லாதவர்கள் சிறுபான்மையினராக கருதப்பட்டு, அவர்களுக்கு இச்சட்டம் உதவும்) இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.