அஸ்வெசும நிதி போன்ற அரசாங்கத்தின் திட்டங்களால் வேலை செய்யவேண்டிய இளையவர்கள் பலர் வீட்டில் இருந்து சும்மா சாப்பிடப் பழகிக் கொண்டார்கள் என்று களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் எச். எம். நவரத்ன பண்டா தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக அதுபோன்ற இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க அரசு வழிவகை செய்யலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வற் அதிகரிக்கும் போது, நுகர்வோர் சிக்கலை எதிர்கொள்கிறார். பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால் நுகர்வை மட்டுப்படுத்தியுள்ளனர். நுகர்வைக் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைந்துள்ளது. அவர்களை ஊக்குவிக்கும் திட்டம் வேண்டும்.
அப்படியானால் தான் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய முடியும். அந்த விஷயங்களை ஊக்குவிக்க அரசாங்கம் மற்றொரு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை வரிகளால் மட்டுமே கொண்டு வர முடியாது, வரி விதிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்கின்றனர். வரிகளை வசூலித்த பிறகு அதை என்ன செய்வது என்பது அடுத்த கேள்வி.
சில சமயங்களில் அஸ்வெசும என்று சொல்லப்படும் நிவாரண நிதிக்க அரச வரவு செலவு திட்டத்திலிருந்து அதிகப் பணத்தை ஒதுக்குவதைப் பார்க்கிறோம். அப்படியானால், அந்தப் பணத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மக்கள் சம்பாதித்து சாப்பிடக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவது முக்கியம்.
ஊனமுற்றோர், பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இவற்றைக் கொடுத்தால் பரவாயில்லை என்று அர்த்தம்.
மற்றொன்று 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருக்கலாம். அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் தொழில் செய்யக் கூடியவர்களுக்கு கொடுப்பதை மட்டும் எதிர்க்கிறோம். அதன் காரணமாக தினமும் சும்மா இருந்து சாப்பிட பழகிக் கொள்கிறார்கள். வரிப்பணத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது, அவர்களுக்கு உணவு கொடுப்பதை விட சிறந்தது.
1948 முதல் இன்று வரை, மக்கள் சும்மாயிருந்து சாப்பிடக் கூடிய பொருளாதாரத்தை சுமார் 75 ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம்.
எனவே ‘மீனைக் கொடுக்காமல் தூண்டிலை கொடுங்கள்’. அதைத்தான் அரசு வரிப்பணத்தில் செய்ய வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் துரிதப்படுத்துகிறது. விதிக்கப்படும் வரியிலிருந்தும் பலன்களைப் பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.