அமெரிக்கா நாடாளுமன்றத்தில் டிக்டோக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் பிரபலமான டிக்டோக் செயலியானது சீனாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம் அறிமுகப்படுத்திய செயலியாகும்.
பெருமளவில் இரசிகர்களை கொண்ட டிக்டோக் செயலியை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் 2020யில் தடை விதித்தன.
டிக்டோக் செயலியானது பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே தரவுகளை சேகரிப்பதாக சில நாடுகள் குற்றம்சாட்டியதால் தடைவிதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
எனினும், டிக்டோக் செயலியின் தலைமை நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது. இந்நிலையில் அமெரிக்காவின் சில மாகாணங்கள் டிக்டோக்கிற்கு தடை விதித்தாலும், நாடு முழுவதும் தடை விதிக்கப்படவில்லை.
தற்போது,நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிக்டோக் செயலிக்கு தடை விதிக்குமாறு பேச ஆரம்பித்ததால் இதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு, 352 பேர் ஆதரவாகவும், 65 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.
இதற்கமைய நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது, அது அமெரிக்க அதிபர் கையெழுத்திட்ட பின்னர் தடை செய்யப்படும்.
மேலும், அமெரிக்காவில் டிக்டோக் செயலி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால் ByteDance நிறுவனம் அதனை விற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.