உலக அரங்கில் அதிகளவில் விமர்சிக்கப்படும் நாடான ரஷ்யாவில் நேற்று (15) அதிபர் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.
இம்முறை முதற்தடைவையாக அதிபர் தேர்தல் அங்கு மூன்று தினங்களுக்கு நடைபெறுகிறது. நாளை 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தேர்தலில் 11.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 இலட்சம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்லைன் மூலம் வாக்களிக்கும் முறைமை முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறி 2022 செப்டம்பரில் இணைக்கப்படும் என்று ரஷ்யா கூறிய நான்கு உக்ரேனிய பிராந்தியங்களிலும் வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். Nikolay Kharitonov-வின் கம்யூனிஸ்ட் கட்சி, Leonid Slutsky-யின் தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, Vladislav Davankov-வின் புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
ஆனால் புதினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை என்பதால், அவர் 5 ஆவது முறையாக அதிபராக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
புதினுக்கு எதிரான தலைவர்கள் சிறைகளிலோ, வெளிநாடுகளிலோ இருப்பதாலும், உக்ரைன் போர் மற்றும் துணை இராணுவப் படையான வாக்னர் குழுவின் ஆயுதக் கிளர்ச்சிக்கு இடையிலும் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
அவரை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதின் 76.7% வாக்குகள் பெற்றிருந்தார். அரசியல் சாசனத் திருத்தத்தின் படி புதினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பொறுப்பு வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.