எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்படுவதை தடுப்பதற்காக இலங்கையருக்கு வழங்கப்பட்டதாகக்கூறப்படும் பாரிய இலஞ்சத் தொகையான 8 ஆயிரம் கோடி ரூபாய், இலங்கையின் வருடாந்த சுகாதாரச் செலவீனதுக்கு சமம் என்று சுதந்திர மக்கள் முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் எம்.பியுமான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு இவ்வாறான பாரிய தொகை குறித்து மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்ய பல மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்யாமல் சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்ததற்கான காரணத்தை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இது ஒரு விசித்திரக்கதையாக இருந்தால், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சம்பவத்தைத் தகர்த்து மக்கள் மனதை வேறு திசையில் செலுத்துவதே இதன் நோக்கமாகஇருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.