மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் தனித்தனியாக சிகரெட் விற்பனை செய்வதை அரசு தடைசெய்ய வேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சம்பத் டி சேரம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில், பன்னாட்டு புகையிலை நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சிகரட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கு அரசு உடனடியாக தலையிட வேண்டும்.
உலகத்தில் மரணங்கள் ஏற்படுவதற்கு தொற்றா நோய்கள் ஒரு பிரதான காரணமாகும். இலங்கையில் 83 வீத மரணங்கள் தொற்றாத நோய்களால் ஏற்படுகின்றன. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு பிரதான 4 காரணிகள் உள்ளன, அவற்றுள் முதன்மை காரணியாக புகைத்தல் பாவனையாகும்.
சிகரட் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களின் பயன்பாடு தனிநபர்களின் மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும்; கட்டுப்படுத்தும் ஒரு போதைப்பொருளாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, புகையிலை பாவனையால் உலகளவில் வருடாந்தம் சுமார் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும், இலங்கையில் தினமும் 50 பேர் அகால மரணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையர்கள் நாளொன்றுக்கு 520 மில்லியன் ரூபாவை (52 கோடி) சிகரெட் பாவனைக்காக செலவிடுகின்றனர்.
உலகில் 107 நாடுகள் ஒற்றை சிகரட் விற்பனையைத் தடை செய்திருக்கின்றது. எனினும், இலங்கையில் இன்னும் தனித்தனியாக சிகரட் விற்பனை செய்யப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமே. தனி சிகரட் விற்பனையை தடை செய்வதன் மூலம் சிகரட்டை கொள்வனவு செய்யும் சக்தி குறைந்து, அதன் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சிகரெட் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. மேலும், தனிப்பட்ட விற்பனையைத் தடை செய்வது, சிகரட் பெட்டிகளில் உள்ள எச்சரிக்கை தகவல்களின் பயன்பாட்டையும் அவற்றை பயன்படுத்துவோர் பார்க்கும் அளவையும் அதிகரிக்கிறது. என்றார்.