வெளிச்சவீடு இளைஞர் கழகமும் மற்றும் வெளிச்சவீடு விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடாத்திய 2024 ஆம் ஆண்டிற்குரிய ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (17) முகத்துவாரம் வெளிச்சவீடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டு தொடரில், 36 அணிகள் பங்கு பற்றியிருந்ததுடன், முதலாம் இடத்தினை வெளிச்சவீடு இளைஞர் கழகமும், இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும், மூன்றாம் இடத்தினை சென் இக்னேசியஸ் விளையாட்டு கழகமும், நான்காம் இடத்தினை சன் பிளவர் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டது.
இதில் வெளிச்சவீடு இளைஞர் கழக அணி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், இவ்வாண்டுக்கான சவால் கிண்ணத்தையும் தன தாக்கிக் கொண்டனர்.
வெளிச்சவீடு இளைஞர் கழக தலைவர் V. கபிலன் தலைமையில் ஆரம்பமான இந்த விளையாட்டு தொடரில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா ஜுலைகா முரளிதரன், சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.v. ஈஸ்பரன், மாவட்ட இளைஞர் சேவை சேவை அதிகாரி திருமதி. நிஷாந்தினி அருள்மொழி,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தலைமை காவல் அதிகாரி திரு.G.M. பிரியந்த பண்டார ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக வெளிச்சவீடு விளையாட்டு கழக தலைவர் த.விஜயகுமார், மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் A. தயாசீலன்,மண்முனை வடக்கு முன்னாள் இளைஞர் சேவை உத்தியோகத்தர் R. பிரவின், பலமீன்மடு கிராம உத்தியோகத்தர் Y. தனுராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேசமயம் அழைப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச இளைஞனர் கழக நிர்வாகிகள், கிராம பொது அமைப்புகள் மற்றும் வெளிச்சவீடு இளைஞர் கழக அனுசரணையாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.